ப்ரார்த்தனா பௌத்திக்

சங்க ப்ரார்த்தனை - அறிமுகம்

நமது சங்கத்தின் அடிப்படையான விஷயம் ஷாகா. அந்த ஷாகாவில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அது ஷாகாவின் இறுதியில் பாடப்படும் பிரார்த்தனை ஆகும். பிரார்த்தனையை கூட்டாக சேர்ந்து பாடுவதில்லை. ஒவ்வொரு வரியாக ஒருவர் பாடி மற்ற எல்லோரும் திரும்பப் பாடும்படியாகத்தான்  இருக்கும். அதற்கு காரணம் இருக்கிறது.

பிரார்த்தனையை வெறும் எந்திர கதியில் சொல்லக்கூடாது. அதன் பொருள் புரியாமலும், சொல்லும் முறையறியாமலும் சொல்லுவதால் அதற்குரிய பலன் கிடைக்காமற் போகும். (சொல்லுக சொல்லின் பொருளுணர்ந்து செல்வர் சிவபுரத்து..) வார்த்தைகளை சேர்க்கக்கூடாத இடத்தில் சேர்த்தோ, பிரிக்கக்கூடாத இடத்தில் பிரித்தோ சொல்லுதல் கூடாது. அதேபோல அழுத்தம் கொடுக்கக்கூடிய இடத்தில் மட்டுமே அழுத்தம் கொடுத்து பாடவேண்டும்.

அதனால்தான் சங்கப் பிரார்த்தனையை ஒருவர் தெளிவாகப் பாடி மற்றவர்கள் அதனைப் பின்பற்றி பாடவேண்டும் என்ற முறை உண்டாயிற்று.

இந்த பிரார்த்தனையை தினசரி மனம் ஒன்றி அர்த்தம் உணர்ந்து சொல்லும்போது நமக்குள் ஒரு மாற்றம் உண்டாகும். பிரார்த்தனை ஏற்படுத்தும் மாற்றம் சிலசமயம் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் நமக்குள் ஆன்மபலத்தை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் மராத்தி மொழியில் இருந்தது - 1940 முதல் சமஸ்க்ருதத்தில், கடைசி ஸ்லோகம் மட்டும் ஹிந்தியில்.

முதன் முதலில் 1940 ம் வருஷம், நாக்பூரிலும் (மானனீய ஸ்ரீ யாதவராவ் ஜோஷி)  பூனாவிலும் (மானனீய ஸ்ரீ அனந்தராவ் காலே) சங்க சிக்ஷா வர்காக்களில் பாடப்பட்டது.

ப்ரார்த்தனாவை சமஸ்க்ருதத்தில் எழுதியவர் ஸ்ரீ நாராயண நரஹரி பிடே

ப்ரார்த்தனாவில் உள்ள அம்சங்கள்

யாரிடம் பிரார்த்திக்கிறோம் ?

நாம் யார் ?

யாருடைய காரியம் இது ?

என்னென்ன குணங்கள் வேண்டுகிறோம் ?

நம்முடைய லட்சியமும் செயல்முறையும் 

நம்முடைய லட்சியத்தை அடையும் வழிகள் 

ஸ்லோகங்கள் வாரியாக விளக்கவுரை

சங்கத்தில் நாம் பாடும் பிரார்த்தனையில் முதல் இரண்டு ஸ்லோகங்களில் தாய்நாட்டிற்கு அடிபணிதலும் நமது அர்ப்பணிப்பும் வெளிப்படுகிறது. 

1. "நமஸ்தே ஸதா" - எப்போதும் உன்னை வணங்குகிறேன். யாரை? 

"வத்ஸலே மாத்ரு பூமே"  - அன்பு காட்டும் தாய்நாடே. இது நமது மாத்ரு பூமி - தாய்நாடு. எப்படிப்பட்ட தாய்நாடு? வத்ஸலே மாத்ருபூமே - வாத்ஸல்யம் என்றால் தாய் தன் குழந்தைகளிடம் காட்டும் அன்பு. அதற்கு ஈடு இணையே இருக்க முடியாது. அப்படிப்பட்ட தாயன்பு காட்டும் தாய்நாடு என்று பொருள். அப்படி வாத்ஸல்யம் காட்டும் தாய்நாட்டை எப்போதும் வணங்குகிறேன் என்று அர்த்தம்.

இதன் மக்களாகிய நாம் ஹிந்துக்கள். எனவே இது ஹிந்து பூமி. ஹிந்து என்பது வழிபடும் ஒரு மதம் அல்ல. இது ஒரு உயர்ந்த பண்பாட்டின்  பெயர். அதுவே இந்த ராஷ்ட்ரத்தின் பெயராகிறது. "த்வயா ஹிந்து பூமே ஸுகம் வர்திதோஹம்"- ஹிந்து பூமியே, நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய். நமக்கு போஜனம், சுவாசிக்க காற்று இவை மட்டுமல்ல, நாம் நிம்மதியாக வாழவும், உயர்ந்த பண்பாட்டிப் பின்பற்றவும் இந்த ஹிந்து பூமியே  ஆதாரமாக இருக்கிறது.


2. "மஹாமங்கலே புண்யபூமே த்வதர்தே"- மஹாமங்கலே என்பது ஒரே வார்த்தை, பிரித்து பாடக்கூடாது. மஹாமங்கலமயமான பூமி- இந்த பாரத நாட்டின் ஒவ்வொரு துளி மண்ணும் பெரும் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டுள்ளது. இது வேதம் வளர்ந்த பூமி. தன்னலமற்ற ரிஷிகளும், முனிவர்களும் தோன்றி தனது கம்பீரமான குரலில் சத்தியத்தை முழங்கிய மங்கல பூமி இது. 

தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட பூமி இது (ஹிமாலயம் ஸமாராப்ய யாவதிந்து ஸரோவரம் தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே - பார்ஹஸ்பத்ய சாஸ்த்ரம்) அதனால் இது புண்ய பூமி. இந்த பூமியில் ஜனனம் எடுக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். (வானவரெல்லாம் இங்கு பிறந்திட வேட்கை கொண்டிடுறார்.... புல்லாய் புழுவாய் பிறக்கினும் உன்மடி தவழ்ந்திட ஏங்கிடுறார்..)

"த்வதர்தே" என்றால் உன்பொருட்டு என்று அர்த்தம் 

"பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே"- காயம் என்றால் உடல். பதது என்றால் வீழட்டும் என்று பொருள். உன்பொருட்டு இந்த என் உடல் வீழட்டும் என்று பொருள். நமது மரணம் கூட தேசத்திற்காக, ஹிந்து ராஷ்டிரத்திற்காக இருக்க வேண்டும். (தேடிச்சோறு நிதந்தின்று... பல வேடிக்கை மனிதரைப் போலெ நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?) 

நமஸ்தே நமஸ்தே - உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்.

முதல் இரண்டு வரிகளில் நாம் தாய்நாட்டை பல்வேறு பெயர்களில் அழைத்து, பணிந்து வணங்கி நமது அர்ப்பணிப்பையும் தெரிவிக்கிறோம். 

அடுத்த ஸ்லோகத்தில் இறைவனை அழைத்து நாம் யார், எப்படிப்பட்டவர்கள், என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்கிறோம்  


3. ப்ரபோ சக்திமன் - சர்வ சக்தி வாய்ந்தே இறைவனே! 

"ஹிந்து ராஷ்ட்ராங்க பூதா"- ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களாக உள்ள நாங்கள் - ஹிந்து ராஷ்ட்ரம் என்பது இந்த பாரத பூமி, இதன் மக்கள், இதன் பாரம்பரியம், இதன் பண்பாடு, இதன் லட்சியங்கள், இந்த மக்களின் ஆசை, அபிலாஷைகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களாக உள்ள நாங்கள்

"இமே ஸாதரம் த்வான் நமாமோ வயம்" - உன்னை நாங்கள் பணிவுடன் வணங்குகிறோம். (ஸாதரம்-பணிவுடன்)


4. "த்வதீயாய கார்யாய"- உன்னுடைய காரியத்திற்காக - இது இறைவனுடைய காரியம். இறைவன் தர்மத்தை நிலை நாட்டுபவன். அதற்காகவே அவதாரம் எடுப்பவன். நாமும் தர்மத்தை நிலைநாட்டுகிற வேலையை செய்வதால், இது இறைவனுடைய வேலை. அதனால்தான் "உன்னுடைய வேலைக்காக"  என்கிறோம்.

"பத்தா கடீயம் "-கச்சை அணிந்துள்ளோம். கச்சை அணிந்துள்ளோம் என்று கூறுவது நமது உறுதியைக் குறிக்கிறது..

"சுபாமாசிஷந்தேஹி தத் பூர்த்தயே"- அது பூர்த்தியாக! எது பூர்த்தியாக? இறைவனாகிய உன்னுடைய கார்யத்தை செய்கிறோமே, அது பூர்த்தியாக! உன்னுடைய  நல்லாசிகளை நல்குவாயாக. 


5. "அஜய்யாஞ்ச விச்வஸ்ய தேஹீச சக்திம்" விசுவாஸ்ய அஜய்யாஞ்ச சக்தி - உலகத்தால் வெல்லப்பட முடியாத சக்தி. உலகத்தை வெல்லக்கூடிய சக்தியை நாம் கேட்கவில்லை. அது ஆணவத்தைக் குறிக்கும். நாம் வேண்டுவது உலகத்தால் வெல்லப்பட முடியாத சக்தி. நம்மை யாரும் எதிர்க்கத் துணியாத அளவுக்கு சக்தி. இது பணிவையும் நமது பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. தேஹீச - கொடுப்பாயாக!

"ஸுஷீலம் ஜகத்யேன நம்ரம் பவேத்"- ஸுஷீலம்=நல்லொழுக்கம். ஜகத்யேன நம்ரம்=உலகமே தலை வணங்கி நிற்கக்கூடிய. அதாவது உலகமே தலை வணங்கி நிற்கக்கூடிய தூய ஒழுக்கத்தை அருள்வாயாக என்று பொருள். 


இந்த ஸ்லோகத்தில் முதலில் உலகத்தால் வெல்லப்பட முடியாத சக்தியை வேண்டுகிறோம். அடுத்த வரியில், உலகமே தலைவணங்கக் கூடிய தூய ஒழுக்கத்தை வேண்டுகிறோம். அதாவது நமது சக்தியை கண்டு உலகம் நம்மை வணங்க வேண்டும் என்று கேட்கவில்லை. நமது ஒழுக்கத்தைக் கண்டு உலகம் நம்மை வணங்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

அதே சமயம் சக்தியிருந்து ஒழுக்கம் இல்லை என்றால் அது முரட்டுத்தனத்திற்கு வழி வகுக்கும். அதனால்தான், சக்தியை வேண்டிய அதே மூச்சில் ஒழுக்கத்தையும் வேண்டுகிறோம்.


6. "ச்ருதம் சைவயத் கண்டகாகீர்ண மார்கம்"- ச்ருதம் = ஞானம், விவேகம். எப்படிப்பட்ட விவேகத்தை வேண்டுகிறோம்?  "ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் கண்டககீர்ண மார்கம்" = நாங்களே ஸ்வயமாக தேர்ந்தெடுத்துள்ள இந்த முள் நிறைந்த பாதையை  (கண்டகாகீர்ணம்=முள் நிறைந்த). சுகம் காரயேத்=எளிதாக ஆக்கக்கூடிய. ச்ருதம் = ஞானம்.  எப்படிப்பட்ட ஞானம்? இப்போதெல்லாம் படிப்பதன் நோக்கமே நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இருக்கிறது. ஆனால் நாம் பிரார்த்தனையில் வேண்டுவது உயர்ந்த ஞானம். சுயமாக நாங்களே ஏற்றெடுத்துள்ள இந்த முள் நிறைந்த பாதையை எளிதாக்க கடப்பதற்கு வேண்டிய ஞானம். 

முள்நிறைந்த பாதை என்று என் சொல்கிறோம்? ஒருவன் ஸ்வயம்சேவகனாக ஆவது என்பது மிக எளிதான செயல். ஒருமணி நேரம் ஷாகா வந்தால் அவன் ஸ்வயம்சேவகன். ஷாகாவில் பிரார்த்தனை பாடிவிட்டால் அவன் ஸ்வயம்சேவகன். ஒருவன் ஒருமுறை ஸ்வயம்சேவகன் ஆகிவிட்டால் அவன் வாழ்நாள் முழுவதும் ஸ்வயம்சேவகந்தான் என்று நாம் சொல்கிறோம். ஆகவே ஸ்வயம்சேவகனாக ஆவது மிக எளிதான செயல். ஆனால். ஸ்வயம்சேவகனாக தொடருவது மிகக் கடினமான செயல். தினசரி ஒருமணிநேரம் ஷாகாவுக்குத் தரவேண்டும். ஷாகாவுக்கு முன், பின் சம்பர்க்கம் செய்ய வேண்டும். சங்க காரியங்களுக்கு நேரம், உழைப்பு, சிந்தனை இவைகளை கொடுக்க வேண்டும். சங்க குணங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஸ்வயம்சேவகனுக்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் எளிமையான விஷயங்கள் இல்லை. அதனால்தான் முள் நிறைந்த பாதை என்கிறோம். அதுவும் நாமே ஏற்றெடுத்துள்ள பாதை. யாரும் வற்புறுத்தி ஏற்றுக் கொள்ள வைத்தது அல்ல. இப்படிப்பட்ட பாதையைத்தான் எளிதாகக் கடக்கக்கூடிய ஞானத்தை வேண்டுகிறோம்.


7. "ஸமுத்கர்ஷ நிஷ்ரேய ஸஸ்ய"- ஸமுத்கர்ஷ = இவ்வாழ்க்கையில் உயர்வு. நிஷ்ரேயஸ்=மோக்ஷம் . இப்போதுள்ள வாழ்க்கையிலும்,  மறுமையிலும் உயர்வுக்கு வழிவகுப்பது எது?

"ஏகம் உக்ரம் பரம் ஸாதனன்" - இப்போதுள்ள வாழ்க்கையிலும்,  மறுமையிலும் உயர்வுக்கு வழிவகுக்கும் தீவிரமான ஒரே வழி... அதன் பெயர் “வீரவ்ரதம்" என்பதாகும். அதாவது நாம் ஏற்றெடுத்துள்ள பணியினைப் பற்றி நிற்பது. அந்த வீரவிரதம் என்ன? "நமது ஹிந்து ராஷ்டிரத்தை எல்லாத்துறைகளிலும் முன்னேற்றி ஹிந்து ராஷ்டிரத்தை மகோன்னதப் புகழடைந்த நிலைக்கு கொண்டு செல்வது"


8. அந்த வீர விரதத்தின் மீதுள்ள லட்சிய உறுதியானது (த்யேய நிஷ்டா = லட்சிய உறுதி) "ததந்த= மனத்தகத்தே,  ஸ்புரது அக்ஷயா= குன்றாமல் துடித்துக் கொண்டிருக்கட்டும். எப்படி துடித்துக் கொண்டிருக்க வேண்டும்? 

ஹ்ருதந்த: ப்ரஜாகர்து தீவ்ரானிசம் = இதயத்தில் இரவுபகலாக விழிப்புடன் துடித்துக் கொண்டு இருக்கட்டும்.

யதார்த்தத்தில் பார்க்கும்போது, பலருக்கு மனதில் ஒரு உறுதி ஏற்படும். ஆனால், அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய் அது தன முக்கியத்துவத்தை இழந்து விடும். (ஒரு மாணவன் தினசரி காலை எழுந்து ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி செய்ய முடிவு செய்தான். முதலில் உற்சாகமாக ஆரம்பித்த அவன் நாளாக, நாளாக, உற்சாகம் குறைந்து பின்பு நிறுத்திவிட்டு கதை)


9. இந்த ஸ்லோகத்தில் நமது சக்தி எப்படிப்பட்ட கார்யம் செய்கிறது என்பதையும் அதற்கு இறைவனின் ஆசிகளையும் கேட்கிறோம்.

"விஜேத்ரீ சந ஸம்ஹதா கார்ய சக்திர்"- விஜேத்ரீ=வெற்றி பொருந்திய (வெற்றி அல்லது வீர மரணம் என்பதெல்லாம் இல்லை. வெற்றி மட்டுமே லட்சியம்.) ஸம்ஹதா கார்ய சக்திர்=ஒற்றுமையால் திரண்ட கார்ய சக்தி, செயலாற்றும் சக்தி. சங்க சக்தி என்பது தனிநபர் சக்தி அல்ல, இது ஒரு ஒருங்கிணைந்த சக்தி, ஒற்றுமை சக்தி.

அது என்ன செய்கிறது?

"விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்"- தர்மத்தை பாதுகாத்து. 4வது ஸ்லோகத்தில் பார்த்தோம். த்வதீயாய கார்யாய! அதாவது உன்னுடைய காரியத்திற்காக, இறைவனுடைய காரியத்திற்காக. தர்மத்தை நிலைநாட்டுவதே இறைவனின் கார்யம். அதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம். தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்=தர்மத்தை பாதுகாக்கும் காரியத்தை செய்கிறோம். நம்முடைய ஒற்றுமையால் திரண்ட கார்ய சக்தி தர்மத்தை பாதுகாக்கும் காரியத்தை செய்வதுடன், விதாயாஸ்ய = அத்துடன் 


10. அத்துடன்,

“பரம் வைபவன் நேதுமே தத் ஸ்வராஷ்ட்ரம்” = நம்முடைய ராஷ்டிரத்தை மகோன்னத நிலைக்கு கொண்டுசெல்கிறது. இப்படி இரண்டு காரியங்களையும் (தர்மத்தைப் பாதுகாப்பது மற்றும் தேசத்தை மகோன்னத நிலை அடையச் செய்வது) செய்கிற நமது கார்ய சக்தியானது, உனது ஆசியால் 

ப்ருஷம் ஸமர்த்தா பவது =மிக்க திறமையுள்ளதாக ஆகட்டும்.


11. பாரத் மாதா கீ ஜய் = பாரத அன்னை வெல்க!

பிரார்த்தனை முழுவதும் சமஸ்கிருதத்தில் உள்ளது. கடைசி வாரியான பாரத் மாதா கீ ஜய் மட்டும் ஹிந்தியில் உள்ளது. பாரத் மாதா கீ ஜய் என்ற வார்த்தையானது நமது தேச விடுதலைப் போரில் சாதாரண மக்களையும் சுதந்திர வேட்கையுடன் எழுச்சி பெற வைத்த வாசகம். இது ஹிந்தி மொழி என்றாலும் கூட இவ்வார்த்தை மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மந்திர வார்த்தை ஆகிவிட்டது.

சுருக்கமாக...

பிரார்த்தனையில் முதலில் நாம் பாரத அன்னையை புகழ்ந்து வணங்கி, (நான் – ‘அகம்’ என்று ஒருமையில் குறிப்பிட்டு) நம்மை அர்ப்பணிக்கிறோம். 

இரண்டாவதாக, நாம் (நாம் – ‘வயம்’ என பன்மையில் குறிப்பிட்டு) இறைவனுடைய காரியத்தை செய்ய கச்சை அணிந்துள்ளோம் என்பதை சொல்லி, அது நிறைவேற ஆசிகளை வேண்டுகிறோம்.

இறைவனிடம் 5 குணங்களை வேண்டுகிறோம். இந்த 5 குணங்களும் சாதாரண குணங்கள் அல்ல. ஒவ்வொரு குணமும் நாம் ஏற்றெடுத்துள்ள  லட்சியத்தை எய்துவதற்கு தேவைப்படும் அவசியமான குணம் ஆகும். ஒவ்வொரு குணமும் ஒரு அடைமொழியோடு (Adjective, பெயரெச்சம்) சொல்லப்படுகிறது. 

1. உலகத்தால் வெல்லப்பட முடியாத சக்தி, 

2. உலகமே தலைவணங்கக் கூடிய நல்லொழுக்கம், 

3. நாமே ஏற்றெடுத்துள்ள முள்நிறைந்த பாதையை எளிதாக்க கடக்க உதவும் ஞானம், 

4. இம்மைக்கும், மறுமைக்கும் உயர்வுக்கு வழிக்கும் வீரவிரதம், 

5. இதயத்தில் எப்போதும் குன்றாது விழிப்புடன் துடித்துக்கொண்டிருக்கும் லட்சிய உறுதி 

இவைகளை வேண்டுகிறோம். 

பிரார்த்தனை மூலம் நாம் நமது உள்சக்தியை எழுப்புகிறோம்.  நாம் பொருட்களை வேண்டவில்லை. குணங்களை வேண்டுகிறோம். ஆன்ம பலத்தை வேண்டுகிறோம்.

மூன்றாவதாக, நமது லட்சியமானது தர்மத்தைப் பாதுகாத்து, தேசத்தை பரம வைபவ நிலைக்கு எடுத்துச் செல்வது  என்பதை சொல்லி, அதை அடைவதற்காக வந்துள்ள நமது வெற்றி பொருந்திய கார்யசக்தி திறமையுள்ளதாக ஆவதற்கு இறைவனின் ஆசியை வேண்டுகிறோம்.


Comments

Popular posts from this blog

சுலோகங்கள்